தமிழ் நாட்டில் முதன் முதலாய் தனது சேவையினை விஸ்தரித்திருக்கும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்

தமிழ்நாட்டின் சென்னையில் சுகவீனமுற்று போரூர் இராமச்சந்திரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையின் முல்லைத்தீவினைச்சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகம் உடனடியாக பணம் வழங்கி உதவியுள்ளது.


கடும் வயிற்று வலியினால் அவதிப்பட்டு கடந்த 17.04.2014 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நித்தியானந்தன் விஜயாகரன் என்ற பன்னிரு வயது சிறுவனுக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகவும் உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொண்டு அக்கல்லினை அகற்ற வேண்டும் என்றும் மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டது. எனினும் அதற்குரிய பணத்தினை திரட்ட முடியாத குடும்ப சூழலினைக்கொண்ட அச்சிறுவனுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக முப்பத் தைந்தாயிரத்து ஐந்நூறு இந்திய ரூபாக்களை (35,500) உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகம் வழங்கியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பாக கடல் கடந்து ஆஸ்திரேலியா செல்வதற்காக பயணித்த வேளை இச்சிறுவனின் தந்தையான நித்தியானந்தன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தனது தாயாருடன் அவன் மிக வறுமையில் வாடி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். சத்திர சிகிச்சைக்கு பணம் புரட்ட முடியாமல் சிறுவனின் தாயார்உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தினை அணுகி உதவியினை வழங்குமாறு கேட்டுக்கொண்டதை கவனத்திற்கொண்டும் , அச்சிறுவனின் அவசர சிகிச்சையினை உணர்ந்தும் நேரடியாகவே பண உதவியினை குறிப்பிட்ட குறுகிய கால இடைவெளியில் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகம் வழங்கி அச்சிறுவனின் வயிற்று வலியினைக் குணமாக்க உதவி புரிந்துள்ளது.

மேற்படி, பயனாளி சிறுவனின் நிலையினை தமிழ் நாட்டில் உள்ள உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி திருமதி. இளமதி அவர்கள் உறுதிப்படுத்தியதும் உடனடியாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பழனி ராஜா அவர்களும் ஆணையத்தினில் உறுப்பினர்களாக அவர்களின் நண்பர்களும் இணைந்து இந்திய ரூபாய் முப்பதினாயிரத்தையும், “தாய்மடி” இல்லப் பொறுப்பாளர் செல்வி. ஸ்ரீதேவி அவர்கள் பணியகம் சார்பாக ஐந்தாயிரம் ரூபாக்களையும் வழங்கி இச்சிறுவனுக்கு உதவியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி விஜயாகரனின் உடல்நிலையானது உடனடி சிகிச்சையின் பின் நன்கு முன்னேற்றமடைந்து , அவன் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப இருப்பதாகவும் காலங்கடத்தாமல் தக்க தருணத்தில் மேற்கொண்ட அவசர சிகிச்சையின் காரணமாக குறிப்பிட்ட சத்திர சிகிச்சை மேற்கொள்ள தேவையற்றது என்றும் மருத்துவர் கூறியிருப்பதாகவும் அறியப்படுகின்றது.


உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகத்தின் தமிழ்நாட்டு விசேட பிரதிநிதி திருமதி. இளமதி மற்றும் தாய்மடி இல்ல பொறுப்பாளர் செல்வி. ஸ்ரீதேவி அவர்கள் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகத்தின் நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுத்தமை விசேட அம்சமாகும்.

முகநூல் (Facebook) ஊடாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகமானது ஆரம்பிக்கப்பட்டு குறுகிய கால இடைவெளியில் ஈழத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வழங்கிய உதவிகளை தாண்டி முதன் முறையாக தமிழ் நாட்டில் தமது உதவியினை வழங்கியிருப்பது இங்கு சிறப்பு அம்சமாகும். அதாவது தமிழ் நாட்டில் சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே இது உதவி புரிந்திருந்தாலும் சிறை தவிர்ந்து ஒரு வெளி உலக செயற்பாட்டில் தன்னை அறிமுகப்படுத்தி இருக்கும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு பணியகத்தின் உதவிச்செயற்பாடுகள் உலகம் எங்கும் உள்ள நாடுகளுக்கும் விரைவில் செயற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகமானது இன்னும் தனக்கென ஒரு அலுவலகத்தை கொண்டிருக்காமலேயே முகநூல் ஊடாக ஆரம்பிக்கப்பட்டு, முகநூல் ஊடாகவே உதவுகின்ற உறவுகளை ஒன்றிணைத்து, முகநூல் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கி வருவதென்பது பிரம்மிக்கத்தக்க புரட்சிகரமான ஒரு முகநூல் செயற்பாடாகும்.

அல்லலுறும் மக்களுக்கு உதவிகள் புரிய விரும்புவோர் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகத்தில் உறுப்பினராக இணைந்து அதன் கொள்கைகள் பண்புகளை விளங்கிக்கொண்ட பிற்பாடு பணியகத்தின் ஊடாக நேரடியாக உதவுபவர்களின் பெயர் விபரங்களின் ஊடாக உதவிகள் புரியலாம் என்பது உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகத்தின் கொள்கைகளில் ஒன்றாகும்.

                             “அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்”

0 comments:

Post a Comment