வவுனியாவில் உடல் செயலிழந்த இளைஞருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை பெற உதவியது, WTRRC.

பல வருடங்களின் முன் வாகன விபத்தொன்றில் தலையினில் அடிபட்டு உடல் செயலற்று நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக சிகிச்சையின்றி மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்த திரு. சுபன் (வயது 29) என்பவரின் மருத்துவ சிகிச்சைக்காக முதற்கட்டமாக ஒரு இலட்சம் இலங்கை ரூபாக்களை உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ளது.

திரு. சுபனின் பரிதாப நிலையினை நேரில் பார்வையிட்ட ஒரு கருணையுள்ள சகோதரி உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திடம் சுபனின் முழு விபரங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ் ஆதாரங்களுடன் உதவிக்கோரிக்கையினை அனுப்பி வைத்தார்.
மேற்படி, சுபனின் உண்மை நிலையினை உறுதிப்படுத்திய பின் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் பிரித்தானியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் திரு. கரு அனுசன் அவர்கள் தனது தங்கையான திருமதி. அகிம்சனா விந்தனிடம் சுபனின் நிலையினைத் தெரிவித்து, தனது தங்கையிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாக்களைஉலகத்  தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் சார்பாக திரு. சுபனுக்கு வழங்கினார்.

பயனாளி சுபன் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையாகிய கட்டில் மெத்தை வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் அவரின் உடற் பரிசோதனை (ஸ்கான்) செய்து ஆரம்பக்கட்ட சிகிச்சைக்காகவே முதற்கட்டமாக 03.05.2014 அன்று ஒரு இலட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டது.

மேற்படி அவரின் உடல்நிலை சிகிச்சையூடாக முன்னேற்றமடைந்து முழுமையாக குணமடையும் வரை அடுத்த கட்ட உதவிகளையும் மனப்பூர்வமாக செய்ய உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் முன்வந்துள்ளது.

முகநூல் (FACEBOOK) ஊடாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள்ளேயே ஈழத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நேரடியாக இரண்டாவது உதவியினை செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது முகநூல் ஊடாக ஆரம்பிக்கப்பட்டு முகநூல் ஊடாகவே உதவுகின்ற உறவுகளை ஒன்றிணைத்துஇ முகநூல் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கி வருவதென்பது ஒரு முகநூல் புரட்சியாகும்.

                               "அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்"

இந்தச் செய்தியின் இணைய வடிவம்:
மயங்கிச் சரிந்தார்கள் உண்ணாவிரதம் இருந்துவந்த ஈழத்து உறவுகள்!!


இந்தோனேசியாச் சிறையில் தமது விடுதலைக்காக ஏற்கனவே அறிவித்தபடி 21-04-2014 முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் ஒன்பது ஈழத்து உறவுகளில், ஏற்கனவே முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயப்பட்ட இருவர் மூன்றாவது நாளான நேற்று  மயங்கிச் சரிந்தார்கள்

கடந்த வருடம் அகதிகளாகச் சென்ற தங்களை விடுதலை செய்து பிறிதொரு குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையினை முன் வைத்து கடந்த 21-04-2014 அன்று திங்கட்கிழமை முதல் இந்தோனேசியாச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 9 ஈழத்து உறவுகளும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

மூன்றாவது நாளான நேற்று, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த உறவுகளான பிரசன்னா ரவீந்திரன் மற்றும் ரஞ்சித் அசோகராஜா ஆகிய இருவரும் மயக்க நிலைக்குச் சென்று மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்று விட்டனர்.


இவர்களின் உடனடி மயக்கத்திற்குக் காரணம், இவர்கள் இருவரும் ஏற்கனவே இலங்கையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் மிகவும் மோசமாக படுகாயமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தங்களது உடல் நிலையினையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட இருவரின் உடல்நிலையானது தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதற்கு இடம் கொடுக்காததால் அவர்கள் மயக்க நிலையினை அடைந்து மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்று விட்டார்கள். இவர்களோடு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற 7 பேரது நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது. இவர்களும் இலங்கை முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

மூன்றாவது நாளான நேற்று (23-04-2014) எந்தவொரு அதிகாரிகளும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை! உலக மனித உரிமை அமைப்புகளும் மற்றும் தொண்டமைப்புக்களும் இவர்களின் பரிதாப நிலையினைக் அறிந்தும் கண்டும் காணாமல் கண்மூடியே தூங்கிக் கொண்டிருக்கின்றது.
மேற்குறிப்பிட்ட மயங்கிய இரு நபர்களையும் குடிவரவு அதிகாரிகள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று விட்டதாக இவர்களோடு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற பார்த்தீபன் தெரிவித்தார்.


பார்த்தீபன் தொடர்ந்து தெரிவிக்கையில் “இன்றுடன் தொடர்ந்து நான்காவது  நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றோம். எந்தவொரு அதிகாரிகளும் வந்து எமக்கு ஒரு நல்ல பதில் தரவில்லை! அவ்வாறு, ஒரு சில குடிவரவு அதிகாரிகள் வந்தாலும் உண்ணாவிரதத்தினை கைவிடும்படியும் நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது” எனவும் மிரட்டும் தொணியில் கூறிச் சென்றதாகவும்… தொடர்ந்து மிகவும் சோர்வடைந்து பேசக்கூட முடியாமல், புலம் பெயர் தேசத்து ஈழ உறவுகளும், தமிழகத் தொப்புள் கொடி உறவுகளும் மற்றும் அரசியல் தலைவர்களும் தங்களது விடுதலைக்காக குரல் கொடுக்கும்படி கண்ணீர் மல்கி வேண்டிக் கொண்டார்.

உலகினில் பரந்து வாழுகின்ற தமிழ் உறவுகளே..!

நமது உறவுகளின் விடுதலைக்காக எழுந்து வந்து குரல் கொடுக்க வாருங்கள் என…உலகத்  தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் அனைத்து தமிழ் உறவுகளிடமும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றது

தமிழக சிறையில் உள்ள உறவுகளுக்கு சட்ட உதவி...!


தமிழ்நாட்டில் உள்ள புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கவியின்பன் (பாதுகாப்புக் காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற போராளியின் வழக்கு சம்மந்தமான உதவிகளுக்காக “உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின்" கோரிக்கையினை ஏற்று குறித்த நேரத்தில் குறிப்பிட்ட பணத் தொகையினை மனமுவர்ந்து உடனடி உதவியாக அவரது வழக்கறிஞரான தமிழக மக்கள் உரிமைகள் கழகத்தின் தலைவர் திரு புகழேந்தி அவர்களிடம் கையளித்த உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் நோர்வேக்கான ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்தன் அவர்களுக்கும், யாழ்/கரவெட்டி மக்கள் ஒன்றிய பிரான்ஸ் கிளைக்கும் நன்றிகளைத் தெரித்துக் கொள்வதோடு…

துபாயில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்து உறவுகளின் அத்தியாவசியத் தேவைகளுக்காக பண உதவிகள் செய்து வருகின்ற மேற்குறிப்பிட்ட உலகத்  தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் நோர்வேக்கான ஒருங்கிணைப்பாளர் திரு. ஆனந்தன் அவர்களுக்கும், பிரித்தானியவிற்கான ஒருங்கினைப்பாளர் திரு. கரு. அனுசன் அவர்களுக்கும்… “உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்” தனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

-நன்றி

                             "அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்"

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
(27.02.2014)

◆ குறிப்பு:

வழக்கு உதவிக்காக…

திரு. ஆனந்த் அவர்களால் இருபதினாயிரம் (20000) இந்தியா ரூபாக்களும், யாழ்/கரவெட்டி மக்கள் ஒன்றிய பிரான்ஸ் கிளையால்  இருபத்தையாயிரம் (25000) இந்திய ரூபாக்களும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் சென்னையில் சுகவீனமுற்று போரூர் இராமச்சந்திரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையின் முல்லைத்தீவினைச்சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகம் உடனடியாக பணம் வழங்கி உதவியுள்ளது.


கடும் வயிற்று வலியினால் அவதிப்பட்டு கடந்த 17.04.2014 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நித்தியானந்தன் விஜயாகரன் என்ற பன்னிரு வயது சிறுவனுக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகவும் உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொண்டு அக்கல்லினை அகற்ற வேண்டும் என்றும் மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டது. எனினும் அதற்குரிய பணத்தினை திரட்ட முடியாத குடும்ப சூழலினைக்கொண்ட அச்சிறுவனுக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக முப்பத் தைந்தாயிரத்து ஐந்நூறு இந்திய ரூபாக்களை (35,500) உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகம் வழங்கியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பாக கடல் கடந்து ஆஸ்திரேலியா செல்வதற்காக பயணித்த வேளை இச்சிறுவனின் தந்தையான நித்தியானந்தன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தனது தாயாருடன் அவன் மிக வறுமையில் வாடி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். சத்திர சிகிச்சைக்கு பணம் புரட்ட முடியாமல் சிறுவனின் தாயார்உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தினை அணுகி உதவியினை வழங்குமாறு கேட்டுக்கொண்டதை கவனத்திற்கொண்டும் , அச்சிறுவனின் அவசர சிகிச்சையினை உணர்ந்தும் நேரடியாகவே பண உதவியினை குறிப்பிட்ட குறுகிய கால இடைவெளியில் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகம் வழங்கி அச்சிறுவனின் வயிற்று வலியினைக் குணமாக்க உதவி புரிந்துள்ளது.

மேற்படி, பயனாளி சிறுவனின் நிலையினை தமிழ் நாட்டில் உள்ள உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி திருமதி. இளமதி அவர்கள் உறுதிப்படுத்தியதும் உடனடியாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பழனி ராஜா அவர்களும் ஆணையத்தினில் உறுப்பினர்களாக அவர்களின் நண்பர்களும் இணைந்து இந்திய ரூபாய் முப்பதினாயிரத்தையும், “தாய்மடி” இல்லப் பொறுப்பாளர் செல்வி. ஸ்ரீதேவி அவர்கள் பணியகம் சார்பாக ஐந்தாயிரம் ரூபாக்களையும் வழங்கி இச்சிறுவனுக்கு உதவியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி விஜயாகரனின் உடல்நிலையானது உடனடி சிகிச்சையின் பின் நன்கு முன்னேற்றமடைந்து , அவன் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப இருப்பதாகவும் காலங்கடத்தாமல் தக்க தருணத்தில் மேற்கொண்ட அவசர சிகிச்சையின் காரணமாக குறிப்பிட்ட சத்திர சிகிச்சை மேற்கொள்ள தேவையற்றது என்றும் மருத்துவர் கூறியிருப்பதாகவும் அறியப்படுகின்றது.


உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகத்தின் தமிழ்நாட்டு விசேட பிரதிநிதி திருமதி. இளமதி மற்றும் தாய்மடி இல்ல பொறுப்பாளர் செல்வி. ஸ்ரீதேவி அவர்கள் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகத்தின் நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுத்தமை விசேட அம்சமாகும்.

முகநூல் (Facebook) ஊடாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகமானது ஆரம்பிக்கப்பட்டு குறுகிய கால இடைவெளியில் ஈழத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வழங்கிய உதவிகளை தாண்டி முதன் முறையாக தமிழ் நாட்டில் தமது உதவியினை வழங்கியிருப்பது இங்கு சிறப்பு அம்சமாகும். அதாவது தமிழ் நாட்டில் சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே இது உதவி புரிந்திருந்தாலும் சிறை தவிர்ந்து ஒரு வெளி உலக செயற்பாட்டில் தன்னை அறிமுகப்படுத்தி இருக்கும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு பணியகத்தின் உதவிச்செயற்பாடுகள் உலகம் எங்கும் உள்ள நாடுகளுக்கும் விரைவில் செயற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகமானது இன்னும் தனக்கென ஒரு அலுவலகத்தை கொண்டிருக்காமலேயே முகநூல் ஊடாக ஆரம்பிக்கப்பட்டு, முகநூல் ஊடாகவே உதவுகின்ற உறவுகளை ஒன்றிணைத்து, முகநூல் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கி வருவதென்பது பிரம்மிக்கத்தக்க புரட்சிகரமான ஒரு முகநூல் செயற்பாடாகும்.

அல்லலுறும் மக்களுக்கு உதவிகள் புரிய விரும்புவோர் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகத்தில் உறுப்பினராக இணைந்து அதன் கொள்கைகள் பண்புகளை விளங்கிக்கொண்ட பிற்பாடு பணியகத்தின் ஊடாக நேரடியாக உதவுபவர்களின் பெயர் விபரங்களின் ஊடாக உதவிகள் புரியலாம் என்பது உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகத்தின் கொள்கைகளில் ஒன்றாகும்.

                             “அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்”
துபாயில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அகதிகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழ உறவுகளுக்கு மாற்றுடைகள், மருத்துவ பொருட்களை கொடுத்துதவியது தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
உலகினில் பல தொண்டமைப்புக்கள் இருந்தும் துபாயில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழ உறவுகளுக்கு உதவிட பல வழிகளில் முயன்றும் இன்று வரை அந்த அமைப்புக்களால் உதவிட முடியவில்லை. அவ்வாறு உதவிட முன் வந்த போதும் அங்குள்ள அதிகாரிகள் அந்த உதவிகளை அங்குள்ள உறவுகளுக்கு வழங்கிட ஒரு போதும் அனுமதித்ததும் இல்லை!
இதனால், அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழ உறவுகளும்… அந்த உறவுகளில் ஒருவரான ஐந்து வயது குழந்தை தரணிகாவும் மருத்துவ உதவிகளின்றி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். தரணிகாவிற்கு சிறுநீர் தொற்று வியாதி இருந்தும் அதற்குரிய முறையான சிகிச்சைகளின்றி அந்தக் குழந்தையோடு அங்குள்ள முதியவர் வரை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மாற்றுடை கூட இல்லாமல் மக்கிப் போன கிழிந்த உடைகளையே அணிந்து தமது மானத்தைக் காப்பாற்றி வலிகளோடு வாழ்ந்து வந்தனர். இதை அறிந்த தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் துபாய் தேசத்திற்கான ஒருங்கிணைப்பாளர் திரு. பழனிராஜா அவர்கள் தனது ஆணையத்தின் முக்கிய பிரதிநிதிகளான திரு. செந்தில், திரு. கார்த்திக் மற்றும் திரு. வாசு சாமிநாதன் ஆகியோருடன் உடனடியாக உதவிட முன் வந்தார்.
யாருமே உதவிட முடியாமல் போன அந்த ஈழ உறவுகளுக்கு தனது தனிப்பட்ட அதீதமான முயற்சியால் உடனடியாக மருத்துவப் பொருட்கள், மாற்றுடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கடந்த 24-04-2014 அன்று தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் சார்பாக கொடுத்தனுப்பி அந்த ஈழ உறவுகளுக்கு கிடைக்கும்படியும் செய்துவிட்டார். ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மருத்துவ வசதிகள் ஏதும் கிடைக்காத அந்த ஈழ உறவுகளும் ஆணையத்தின் அதிரடியான உதவியினால் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர் .

தமிழ்நாட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்து உறவுகளுக்கும் ஆணையம் உதவியது.
அத்தோடு நின்று விடாமல் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டிருக்கும், திருச்சி சிறப்பு முகாமைச் சேர்ந்த இரண்டு  ஈழத்து உறவுகளின் வழக்குச் செலவிற்கும் இந்தியப்பணம் முப்பதாயிரம் ரூபாய்களை (30,000) TPRRC யின் துபாய் தேசத்தின் செயலாளர் திரு. மதி மதுசன் அவர்களும் நோர்வேயைச் சேர்ந்த திரு. ஆனந்தன் அவர்களும் கூட்டாக வழங்கி உதவினார்கள்.  உதவியினை பெற்றுக்கொண்டவர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர் .
தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் சேவைகளானது ஆணையம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்  சுயதொழில் வேலைவாய்ப்புக்களுக்காக பல உதவிகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
                                      "அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்"
இச்செய்தின் இணைய வடிவம்:

முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் இரு கால்களை இழந்தவருக்கு சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தது; WTRRC

முல்லைத்தீவு மாவட்டம் குமாரபுரம் முள்ளியவளையில் வசித்து வருபவர் திரு. சத்தியமூர்த்தி (வயது 40) இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் தனது இரு கால்களையும் இழந்து தனது மனைவியையும், தனது ஐந்து சிறு வயது குழந்தைகளையும் காப்பாற்ற இன்றுவரையும் வாழ்க்கையோடு போராடி வருபவர். 
இவரின் குடும்ப வறுமை நிலையினைக் கவனத்தில் கொண்டு இவரது குடும்பத்தினரை தன்னம்பிக்கையோடு மகிழ்ச்சியாக வாழ வைப்பதற்கு ஒரு சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுப்பதற்கு தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் முன் வந்தது.
அந்த அடிப்படையில் அவருக்கு பிடித்த தொழிலாக ஆடு வளர்ப்புத் திட்டத்தினை ஊக்கப்படுத்தி ஆரம்ப கட்டமாக ஒரு இலட்சத்து ஒன்பதினாயிரத்து நானூற்று இருபத்தொன்பது (109429.94- SLR) ரூபா 19-04-2014 அன்று தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தால் வழங்கப்பட்டது.
ஆரம்பகட்டமாக வழங்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட உதவித் தொகையிலிருந்து முதற்கட்டமாக 6 மாதங்களில் சிறந்த பயன்களை ஆணையத்திற்கு, உருவாக்கி காட்டும் பட்சத்தில் … அவரை மேலும் ஊக்குவித்து முன்னேற்றும் நோக்கமாக முதல் வழங்கப்பட்ட தொகையினை விட அதிகமான உதவித் தொகை வழங்கப்படும் என உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்  உறுதிபட தெரிவித்திருக்கின்றது.
இவரைப் போன்று இறுதி யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த குழந்தைகள், கணவனை இழந்தபெண்கள் , உடல் உறுப்புகளை இழந்த அங்கவீனர்கள் மற்றும் வறுமையினால் கல்வி கற்க முடியாத சிறார்கள் என அனைவருக்கும் மாதமாதம் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினரை தேர்ந்தெடுத்து சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்க உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் முன் வந்துள்ளது.
"அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்." 

இந்தச் செய்தியின் இணைய வடிவம்:
சமூக இணையத்தளமான முகப்புத்தகத்தில் காதல் என்றும் அரட்டை என்றும் பொல்லாப்புக்கள் என்றும் வீண் வாதங்களை அரங்கேற்றி வெட்டித்தனம் பண்ணுகின்ற ஒரு சாரார்.

அரசியல் பேசி தம்மை பெரியவர்கள் ஆக்கி தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி விருப்புக்களும் கருத்துக்களையும் இலட்சியம் என்றெண்ணி காலம் ஓட்டும் ஒரு சாரார்.

போராட்டம், புரட்சி, இன, விடுதலை என்று தேசியம் பேசி முகப்புத்தகத்தில் வென்றெடுக்கப்படும் தேசமும் எதிர்ப்புப்போராட்டங்கள் பகிர்வுகள் என்று தேசிய வாதிகளாக சித்தரிக்கும் ஒரு சாரார். என்று முகப்புத்தகம் எல்லோர் முகத்திலும் இழுபட்டு கிழிந்து தொங்குகின்றது.

இவ்வாறு எழுத்திலும் இணையத்தளத்திலும் மட்டும் வீராப்பும் பேச்சும் என்று காலங்கடத்தும் எத்தனை பேருக்கு இலங்கையிலும் உலகம் எங்கும் தவித்து வாழும் தமிழ் உறவுகளின் நினைவு இருக்கின்றது. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பதிவிட்டு விருப்பங்களை அள்ளி வேண்டிக்கொண்டு அடுத்த நாளே மறந்து போவதோடு அவர்களின் கடமை முடிந்து விடுகின்றது. பதிவிட்ட பதிவால் அங்கு வாடுகின்ற உறவுகள் அவலம் தீர்க்கபடுவதுமில்லை. அந்த உறவுகளுக்கு அந்தப்பதிவு பற்றி  தெரிந்திருக்கவும் நியாயமில்லை.

இன்று இதுதான் அதிகமாக முகப்புத்தகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. உலகில் எங்கெங்கு எத்தனை சிறைகளில் எம்மவர்கள் வாடுகின்றார்கள் என்பதே அநேகருக்கு தெரிந்திருக்கவே நியாயமில்லை. 

இவற்றுக்கெல்லாம் மத்தியில் முகப்புத்தகத்தில் நம்பிக்கையோடு ஒரு முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அது நிறைவேறி செயற்பட்டுக்கொண்டும் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

ஆம்..!

ஒரு சிறு கையடக்கத்தொலைபேசியில் திறந்து கொண்ட முகப்புத்தக கணக்கு ஊடாக உலகம் எங்கும் பரந்து வாழுகின்ற உதவும் உள்ளங்களை திரட்டி , சிறுக சிறுக பணம் சேர்த்து, இலங்கையில் மிக அவசர நிலையில் உள்ள வாழ்வாதரங்களை இழந்து தவிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் உதவி ஏற்படுத்திக்கொடுத்து , அவர்களை தமது சொந்த உழைப்பில் நிலை நிறுத்திக் கொள்ளவும் , சிறைகளில் வாடும் உறவுகளின் விடுதலைக்காகப் போராடவும் என்று உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள்  ஆணையம்.

வலிகளை நினைத்து கண்ணீர் வடிக்காமல் அவற்றினை வரிகளால் விளக்கி வலிகளை அறிந்தவனே அடுத்தவர் வலிகளையும் அறிந்திட முடியும் என்ற உண்மையினை உணர்த்தி வருடக்கணக்காக சிறையில் தவிக்கும் ஒரு நல்ல உள்ளம் விதைத்த விதையே இந்த ஆணையம்.

எங்கோ ஒரு தேசத்தில் கோட் சூட் அணிந்து கொண்டோ அல்லது வேட்டியும் சால்வையும் கட்டிக்கொண்டு ஒலிவாங்கி பிடித்து மதிய போசனம் விருந்துகள் என்று ஆடம்பரம் செய்யும் அமைப்பு என்று யாரும் எண்ணி விடாதீர்கள். இந்த ஆணையத்தினை உருவாக்கியவரை இதில் உள்ள உறுப்பினர்கள் நேரில் கண்டதில்லை. அவரை மட்டுமல்ல இங்குள்ள உறுப்பினர்கள் யாவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதுமில்லை. 




மாற்றுடை கூட இல்லாத அடிப்படை வசதிகள் ஏதுமற்ற முகம் துடைக்கும் துணி நார் நாராய் பிய்ந்து தொங்கும் நிலையில் உள்ள அதாவது பணம் இல்லாமல் அல்ல. பணம் இருந்தும் உதவிட எத்தனையோ உள்ளங்கள் இருந்தும் உதவிட முடியாத ஒரு தேசத்தில் கொடுஞ்சிறையில் ஒரு கையடக்கப்பேசியின் ஊடாக முகப்புத்தக முகங்கள் ஊடாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் என்றால் அது உருவாகிய இடத்தினைக் கண்ணுற்றால் பேரதிர்ச்சி உங்களை நிச்சயம் தாக்கும். 



ஆம்..! இதுதான் இந்த ஆணையத்தின் விதையினை இட்ட விருட்சம் உள்ள இடமாகும். இந்த இடத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக தவித்துக்கொண்டு இலங்கைக்கு நாடு கடத்த இருந்த உறவுகளில் ஒன்றாகவும், சொந்த மகளை தமிழகத்திலும் பிரிந்து இன்னுமொரு மகளை கண்ணுக்கு முன்னால் நோய் தாக்கும் கொடிய நிலையிலும் அதாவது சிறுநீர்த்தொற்று காரணமாக நாள் ஒன்றிற்கு பல தடவை உணர்வற்று சிறுநீர் கழிக்கும் பச்சிளம் பாலகியின் அவல நிலைக்கு மருத்துவ வசதி வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருந்து வருந்தியும் கொண்டு தன் வேதனையிலும் வலியிலும் உலகில் அவதிப்படும் உறவுகளின் துன்பத்தினையும் வலியினையும் பற்றி சிந்திக்க முடிகின்ற அந்த உள்ளம் சிறையில் இருந்து கொண்டு அனுதாபம் தேடி உதவிகள்  பெற்றுக்கொண்டு உறவுகளை நினைக்காமல் இருந்திருக்க முடியும்.  

ஆனால் இவ்வளவு கடினப்பட்டு அங்கிருந்து கொண்டு மற்றவர்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு உலகம் எங்கும் அவலப்படும் எம்மின உறவுகளுக்காக அவர்களுக்கு உதவுவதற்காக  என்று தொடங்கப்பட்ட இந்த ஆணையம் ஆனது முகப்புத்தகத்தினை இழிவோடு நோக்கும் பலருக்கு ஒரு சவுக்கடியாகும். வீணான வாதங்கள் ,சீரழிப்புக்கள், தற்கொலைகள் என்று குற்றம் சுமத்தப்படுகின்ற முகப்புத்தக சமூக வலைத்தளத்திற்கு, சமுதாய விழிப்புணர்வாக ஒரு சமுகத்தொண்டாக முகப்புத்தகத்தில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் ஒரு நல்ல பெயரினை பெற்றுக்கொடுத்தது மட்டுமன்றி முகப்புத்தகத்தினை தமது சின்னம் மூலமாக கெளரவித்துமுள்ளனர். அதாவது  தமது சின்னத்தினை  முகப்புத்தக சின்னமான f என்ற இரு எழுத்துக்களுக்குள் உதவிக்கரம் நீட்டும் கைகளையும் உறவுகளை கை தூக்கி உதவுகின்ற கைகளையும் அடக்கி முகப்புத்தகத்தில் உருவாக்கி ஒன்றிணைந்தது போன்று வடிவமைத்ததுடன்  முகப்புத்தக வர்ணமான இள நீல வர்ணத்தினையும் அவர்களின் வர்ணமாக்கி மேன்மைப்படுத்தியுள்ளமை மிக்க சிறப்பாகும்.

 
வெறுமனே வெட்டிப்பேச்சுக்கள் பேசிக்கொண்டிருக்காமல் செயலை கையில் எடுத்து , ஆணையம் உருவாகிய குறுகிய நாட்களுக்கிடையில் உறவுகள் மூலமாக சேர்ந்த பணத்தினை இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அடுத்தவர்களின் கையினை ஏந்தி வாழும் பலரில், மிகவும் அவசர உதவி தேவைப்பட்ட முல்லைத்தீவினைச் சேர்ந்த திரு சத்தியமூர்த்தி என்ற சகோதரனுக்கு இலங்கை ரூபாய்கள் ஒரு லட்சத்து ஒன்பதினாயிரம் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளமை ஆணையம் என்பதனை ஆரம்பித்தலுடன் மட்டும்  நின்று விடாமல் செயலில் இறங்கியமைக்கு சான்றாகும்.

போரில் இரு கால்களையும் இழந்து தனது மனைவி பிள்ளைகளுடன் அன்றாட சீவனத்திற்கு அல்லல் பட்ட இந்த உறவிற்கு அவர் விரும்பிய தொழில் அமைத்துக்கொடுப்பதற்காக இந்த முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது முயற்சியினை கண்காணித்து அவரை ஊக்குவிக்கும் முகமாக அடுத்த கட்ட உதவியும் அவரது தொழில் விஸ்தரிப்பிர்காக வழங்கப்படும்.
கடமைக்கு உதவி என்னும் பெயரில் பத்தாயிரம், இருபதினாயிரம் என்று சிறு தொகைப்பணத்தினை வழங்கி அவர்களை சோம்பேறியாக்கி மிகக்குறுகிய நாட்களில் அந்த பணம் செலவாகி போன பின்பு மீண்டும் கையேந்தும் நிலையினை அவர்களுக்கு கொடுக்காமல், இவ்வாறு ஒரு தொழில் முயற்சியினை அமைத்து கொடுத்து தமது சொந்த தேவைகளினை தாமே நிறைவேற்றிக்கொள்ளவும் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் ஒரு தன்னம்பிக்கையினை பாதிக்கப்பட்ட இவர்களைப்போன்ற உறவுகளுக்கு வழங்க வழி  வகுக்கும் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள்  ஆணையத்தின் இச்செயற்பாடு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அத்துடன் இந்த ஆணையத்தில் இலட்சக்கணக்கில் பணம் புரளவில்லை.  அதற்கு சொத்து என்று சொல்லிக்கொள்ள உதவுகின்ற தன்னம்பிக்கையுள்ள உள்ளங்களை தவிர வேறுதுவும் இல்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குகின்றோம் என்று அடுத்தவர்களிடம் பண உதவி பெற்று அதனை தம்மகத்தே அமுக்கி வைத்திருக்கும் அமைப்புக்களை போல் அல்லாமல். உதவி செய்ய முன்வருபவர்களை ஆணையத்தின் உறுப்பினராக பதிவு செய்து அதன் பின் ஆணையத்தின் சட்ட திட்டங்கள் நோக்கங்களை விளக்கி உதவிகளை உள்வாங்கி கொள்ளும் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் இச்செயற்பாடு பாராட்டத்தக்க ஒன்றாகும்.

இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் சிறு துளி பெரு வெள்ளம் என்ற கருப்பொருளின் படி முடிந்தளவு அது ஆயிரம் ரூபாய் என்றாலும் அந்த உதவி ஏற்கப்பட்டு அந்தப் பண உதவி போய் சேருகின்ற  நபருக்கும் உதவியவரின் பெயரும் தெரிவிக்கப்படும் நிலை இங்கு பிரதானமான ஒரு செயற்பாடு ஆகும். இது பெயர் புகழுக்காக அல்ல. இங்கு ஊழல் , பொய், தவறுகள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் எல்லோருக்கும் யாவும் தெரிய வேண்டும் என்பதற்காகவுமே.


மிகச்சிறந்த முறையில் உறுப்பினர்கள் எல்லோரது கருத்துக்களும் செவி மடுக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு மிக நேர்த்தியான முறையில் செயற்பாடுகள் இங்கே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஒரு வட்ட மேசையில் உட்கார்ந்து இருந்து இவை தீர்மானிக்கப்படுவதில்லை. ஒட்டு மொத்த உறுப்பினர்களும் ஒரே ஒரு முகப்புத்தக குழு உரையாடலில் கலந்துரையாடி செயற்பட்டு வரும்  இந்த ஆணையத்தின் வெளிக்கள செயற்பாடுகள் மட்டும் இலங்கையில் உள்ள உறுப்பினர்களால் நிறைவேற்றப்படுகின்றன. 

உதவி கேட்பவர் உண்மையில் உதவி வேண்டப்படுபவரா? அவரது பின்புலம் , மற்றும் உதவித்தொகை பெற்றுக்கொண்ட பின் அவரது தொழில் நடவடிக்கைகள் என்று யாவுமே மிகச்சரியாக கண்காணிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.

ஆரம்பிக்கப்பட்ட பன்னிரு நாட்களுக்குள் இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளிலும் சவூதி , கட்டார், துபாய், குவைத், ஓமான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும், பிரான்ஸ் சுவிஸ் நோர்வே பின்லாந்து ஜேர்மனி, பிரித்தானியா, பெல்ஜியம்  போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், வட ஆபிரிக்கா, கனடா  மற்றும் அமெரிக்காவிலும் என இருபது நாடுகளில் இருந்து இந்த ஆணையத்திற்கு  உறுப்பினர்கள் தாமாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

பண உதவி மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழவென்று பயணம் தொடங்கி இந்தியா , இந்தோனேசியா, துபாய் , தாய்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் சிறைகளில் வாடும் எமது தமிழ் உறவுகளின் விடுதலைக்காக அந்தந்த நாடுகளின் அரசுகளோடு பேச்சுவார்த்தை நடாத்தவும் அவர்களின் விடுதலைக்காக போராடவும் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் தீர்மானித்துள்ளது.


தமிழ் அமைப்புக்கள் வெறுமனே பெயருக்கு இருக்கின்ற இன்றைய நிலையில் சிறை வாழும் உறவுகளுக்காக அவர்களின் விடுதலைக்காக போராடவும்  பேச்சுவார்த்தை நடாத்தவும் எந்தவொரு பின்புலம் அற்ற இந்த ஆணையம் முன் வந்திருப்பது அவலப்படும் எங்கள் உறவுகளுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் ஆகும். 

சாதி, மத , அரசியல் மற்றும் பக்கச் சார்புகள், இயக்கங்கள் , பதவி , பெயர் , புகழ் போன்ற செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த ஆணையம் செயற்படுகின்றது. அதாவது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவுவது மட்டுமே இதன் முதன்மை குறிக்கோள் ஆகும். இங்கு தமிழ்த்தேசியம் இனவாதம் போன்ற கருத்துக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை காரணம் காட்டி இந்த ஆணையத்தினை எதிர்காலத்தில் எந்த நாடுகளும் தடை செய்திட முன் வரக் கூடாது என்பதற்காகவும்  தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் ஆனது உலகில் உள்ள தமிழ் மக்கள் வாழும்  நாடுகள் எங்கும் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு விரைவில் செயற்பட இருக்கின்றமைக்காகவும் இது ஒரு பொது அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் இதில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் உதவுபவர்கள் ஒருவருக்கொருவர் முரன்பட்டுக்கொள்ள ஏதுவாக அரசியலோ மதமோ இனவாதமோ போன்ற செயற்பாடுகள் அமைந்திடக் கூடாது என்பதற்காகவும் சகல தரப்பட்ட உறவுகளையும் இணைப்பதற்காகவும் இந்த ஆணையம் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கின்றது.

ஆரம்பித்து ஒரு மாதம் பூர்த்தியடையாத நிலையில் ஒரு அலுவலகமோ நிலையான இடமோ இன்றி தனது திட்டங்களை உடனடியாக செயற்படுத்த முனையும் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திற்கு யாவரும்  கை கொடுக்க வேண்டும்.


எல்லோரும் இணைந்து கைகொடுத்து வாழ வழியற்று தவிக்கும் எங்கள் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம். எங்கள் உறவுகளை சொந்தக் கால்களில் நிற்க உதவி புரிந்து அவர்களுக்கு புதுத்தன்னம்பிக்கையினை ஊட்டுவோம். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை நல்குவோம்.

"அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்" என்ற உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் உயிர்ப்பதத்திற்கமைய நாமும் அன்பினால் எங்கள் உறவுகள் யாவரையும் அரவணைத்து காப்போமாக...!

முகப்புத்தகத்தினை தாய் வீடாகக்கொண்ட உலகத்  தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் முகநூல் விருப்ப பக்க தொடுப்பு:  www.facebook.com/WTRRC